உறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா!

இஸ்லாத்தின் பெயரால் மார்க்கம் அறியாத பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாத்திஹாக்களின் வகைகள் இருக்கின்றதே! அப்பப்பா! கொஞ்சமா? மிச்சமா!

அதில் ஒன்று தான் நான் இங்கே கூறப்போகும்,’உறவு அற்ற பாத்திஹா! இந்த பாத்திஹா வினோதத்தை புரிந்து கொண்டு நீங்களே சிந்தியுங்கள்!

இறந்து போன மனிதருக்காக, இறக்கப் போகும் மனிதர்கள் செய்து வரும் 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 10ஆம் நாள் பாத்திஹா, பதினைந்தாம் நாள் பாத்திஹா, இருபதாம் நாள் பாத்திஹா, முப்பதாம் நாள் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹாக்களைப் பற்றியெல்லாம் நீங்கள் அறிந்திருக்கலாம்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நிலவி வரும் ‘உறவு அற்ற பாத்திஹா’ உங்களில் ஒரு சிலருக்கு புரியாத புதிராகக் கூட இருக்கலாம்.

கிட்டத்தட்ட 2 மரக்கால் பச்சரிசியை உரலில் போட்டு இடித்து மாவாக்கி, பன்னிரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, அதற்குத் தகுந்த நெய் சேர்த்துப் பிசைந்து 3 செ.மீ. கனத்தில் 90 செ.மீ. சுற்றளவில் மூன்று ரொட்டிகள் தயார் செய்து , சுட்ட ரொட்டியின் மீது சீனி பாகு தடவி வைத்துக் கொண்டு, 3 மீட்டர் துப்பட்டித் துணி வாங்கி, துணியின் ஒவ்வொரு மூலையிலும், நாணயங்களாக இரண்டு அல்லது மூன்று ரூபாய் வீதம் வைத்து முடிச்சுப் போட்டு அத்துணியின் நடுவில் இந்தப் பெரிய மூன்று ரொட்டிகளை வைத்து கட்டி, கூலிக்கு ஆள் பிடித்து, கனத்த ரொட்டிகளை அவன் தலையில் ஏற்றி, அவன் வீட்டு வாசற்படியைத் தாண்டியவுடன், விரைவாக வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளும் போட்டு விடுவார்கள்.

இறந்து போன மனிதர்க்கு நாற்பதாம் நாள் பாத்திஹா நடந்த ஒரு மாதத்துக்குள் இந்த அறிவுடைமை? சடங்கையும் செய்து முடித்து விடுவார்கள். இந்த மொத்த ரொட்டிகளும் எங்கே போகின்றன என்று கவனித்தால், அந்த ஊர் பெரிய லெவை வீட்டுக்குத்தான் போகின்றது! ரொட்டிகளை மட்டும் கொடுத்தால் வாங்குவாரா அந்த லெவை? கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அந்த ரொட்டிகளை சும்மா வாங்கிக் கொள்ளமாட்டார்! இறந்து போன மனிதர் ஆவியாக இவர் வீட்டுக்கு இரவில் வந்து விடுவாராம். வந்து விட்டால் அவரை விரட்டி அடிக்க அந்த லெவைக்கு தெம்பூட்டும் டானிக்காகப் பத்தோ – பதினைந்தோ பணமும் கொடுக்க வேண்டுமாம்! (துணியின் மூலையில் வைத்த பணம் வேறு) ரொட்டியனுப்பிய வீட்டுக்கதவு இரவு 8 மணிக்கு சாத்தப்பட்டு விடுமாதலால், அவ்விரவு வேளையில் அவ்வீட்டை நாடி உற்றார் உறவினர் யாராவது வந்தால் அதோ கதிதான்!

கதவு திறக்கப்படவே மாட்டாது. காலை 6 மணிக்குத்தான் திறக்கப்படும்!

சரி; உறவு அற்ற பாத்திஹா தான் இவர்கள் ஒதி விட்டார்களே! இறந்து போனவருக்கும் இருப்பவர்களுக்கும் உறவு அன்றோடு அறுபட்டுப் போகின்றதாம்! பிறகு ஏன்? 6 மாத பாத்திஹா – வருட பாத்திஹா என்றெல்லாம் ஓதுகின்றார்கள்? மீண்டும் உறவு புதுப்பிக்கப்படுகின்றதோ?

என்றைக்கு எவர் மரணமடைந்து விட்டாரோ, அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தான் யாது? விசேட பாத்திஹா ஒன்று செய்துதான் உறவை நீக்கிக் கொள்ள வேண்டுமா? வேதனையும், வெட்கக் கேடும் நிறைந்த இத்தகைய பாத்திஹாக்களை இனியேனும் ஓதாமல் நிறுத்தி, இஸ்லாமியக் கொள்கைக்கு களங்கம் கற்பிப்பதை விட்டும் நீங்கிக் கொள்வோமா?

-செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம்

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.